அமிர்த தாரை – த்யானயோகி ஒம்தாஸ்ஜியின் உபதேசங்கள்

அமிர்த  தாரை – த்யானயோகி ஒம்தாஸ்ஜியின் உபதேசங்கள்

சனி, 13 ஜூலை, 2013

பயமே முன்னேற்றத்தின் திறவுகோல்


பொதுவாக ஒரு மனிதன் அடிப்படையில் நல்லவனாக ,கடமையைச் செய்பவனாக ,தன குடும்பத்தின் மீது அன்பும் பாசமும் உள்ளவனகத்தான் இருக்கிறான் .தன் குடும்பத்தை ,தன் சமூகத்தை ,தன் தாய் நாட்டை நேசிக்கிறவனாய் பேணிக் காப்பவனாய் நடந்து கொள்கிறான் . சுருக்கமாகச் சொன்னால் தனக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளைத்  தவறாமல் நிறைவேற்றுகிறான் .

 புற வாழ்வில் தன்னுடைய சுய முன்னேற்றத்திற்கும் ,சுய வளர்ச்சிக்கும்  தனக்கு எது நல்லது என்பதை அறிந்து நடக்கும் மனிதன் ,அக வாழ்வில் உணர்வு பூர்வமாக எப்போதாவதுதான் செயல் படுகிறான்.

ஆரோக்கியமான உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிகக் கடினமான ஒரு செயலாகும் .ஏனென்றால் பழக்கப்பட்ட ஒன்றை மாற்றிக் கொள்வது என்பது எளிதல்ல. மனம் மாற்றத்தை ஏற்க மறுக்கிறது. உதாரணத்திற்கு, உடற்பயிற்சி ஒருவருக்கு நல்லது என்று நன்கு தெரிந்தும் , தினமும் நடைப் பயிற்சி செய்வதைக் கடினமாகக் கருதுகிறார். இன்னும் சொல்லப் போனால் ,ஒருவருடைய உடல் ஆரோக்கியத்துக்கு உணவுக் கட்டுப்பாடு தேவை என்று மருத்துவர் எச்சரிக்கை செய்தும் கூட ,அந்த மனிதருக்கு உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப் பிடிப்பது முடியாத ஒன்றாக இருக்கிறது .  உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. கடைசியில் நோயின் தீவிரமும் அதன் விளைவாக ஏற்படும் வலியும் ,தாக்கமும் தான் ஒரு மனிதனுக்கு மாற்றத்தின் அவசியத்தை உணர்த்துகிறது . சில வேளைகளில்  உயிருக்கு ஆபத்து என்ற ஒரு அச்சுறுத்தல் ஏற்படும் பொழுது மட்டுமே மனப் போக்கையும் ,பழக்க வழக்கங்களையும்  மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தைப்  பலர்  உணருகிறார்கள்.

ஆகவே  அச்சம் அல்லது பயம் தான் பெரும்பாலும் நன்மைக்குத் திறவு கோலாக அமைகிறது.நம் குடும்ப வாழ்க்கையிலும் சரி , நண்பர்களோடும் சரி , இந்த பயம் தான் நன்னடத்தைக்கும் ,நல்ல மாற்றங்களுக்கும் முக்கியக் காரணமாகும் . .நாம் வாழும் காலத்தில் நம்முடைய பெற்றோர் ,உடன் பிறந்தவர்கள் ,நண்பர்கள் இவர்களுடைய உறவை,நட்பை,பாசத்தை இழந்து விடுவோமோ என்ற ஒரு பயம் வருகிறது அதனால் அவர்களை சந்தோஷப் படுத்தி அவர்கள் அன்பு ,நட்பு ,பாசம் இவற்றைப் பெரும் பொருட்டே நல்ல நடத்தையை மேற்கொண்டு நல்லவர்களாக நடந்து கொள்கிகிறோமே தவிர  எப்பொழுதும் நல்லதையே பேச வேண்டும் ; நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற உணர்வினால் அல்ல. 

ஆன்மீக வழியை எடுத்துக் கொண்டால் , நமக்கு எது நல்லது என்பதை நாம் அறிவோம் .இருந்தும் கூட நம் எண்ணங்களை ,மனப் போக்கை ,பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதை சிரமமாக உணருகிறோம் . நம்மில் பலருக்குக் கடவுள் இருக்கிறார் என்ற அறிவு இருந்தாலும் ,எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தப் பரம் பொருளை நேரில் பார்த்த அனுபவம் இல்லை .ஆகையால் ,நாம் என்ன நினைக்கிறோம் என்றால் ,நம்மால் அறியப்படாத ஒருவர் அல்லது ஒன்று எப்படி நமக்குத் துன்பம் தர முடியும் என்று.

இதனால் நமக்குள் மாற்றம் நிகழாமலேயே போய்விட்டால் நம்முடைய வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடாதா ? இதற்கு ஒரே வழி நாம் குருவிடமும் இறைவனிடமும் அன்பும் பக்தியும் செலுத்துவதுதான் .குருவிடமிருந்தும் இறைவனிடமிருந்தும் கிடைக்கும் கருணையும் அருளும் விவரிக்க முடியாத இனிமையும் பெருமையும் நிறைந்தது ஆகும் . 

அப்படிப்பட்ட கருணையையும் அருளையும் எங்கே இழந்து விடுவோமோ என்ற பயமே நம்மை நேரான ,சரியான பாதையில் நடத்திச் செல்லும் . அதுமட்டுமல்ல .நமக்குள் ஆன்மீக ரீதியில் எந்த முன்னேற்றமோ அல்லது மாற்றமோ நிகழவில்லை என்றால்  குருவின் மற்றும் ,கடவுளின் கோபத்திற்கும் சீற்றத்திற்கும் ஆளாகி விட்டால் ஏற்படும்  விளைவுகளை எண்ணி பயந்து ,துன்பமும் வலியும் நிறைந்த நேர்மையான வழியில் செல்ல முற்படுவோம் . குருநாதர் மீதும் கடவுளின் மீதும் நமக்கு இருக்கும் பயமே அவர்கள் மீது அதிக அன்பையும் பக்தியையும் ஏற்படுத்தும் .

பயம் என்பது அன்பைப் பெறவும் பக்தி செய்யவும் ஒரு தூண்டுதல் என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். .ஏனென்றால் பக்தியும் பயமும் ஒன்றாக இணைந்த உணர்வுகள் .இவை இரண்டுமே நம்முடைய மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பெரிதும் துணை புரியும் என்பதில் நெல்முனையளவும் ஐயமில்லை .

With thanks for translation to Mrs Meena Ram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக