சீதாராம் மந்திரம் காலம்,தூரம்,தூய்மை எல்லாவற்றையும் கடந்த ஒரு அற்புதமான மந்திரம், ராம் என்பது அகமும்,புறமும் நிறைந்த ,எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் உணர்வான,சர்வ வியாபியான ஆண் சக்தியைக் குறிப்பதாகும். சீதா என்பது உலகின் சக்தி அல்லது ஆற்றல் வடிவமான பெண் சக்தியைக் குறிப்பதாகும்.
சத்தியமே வடிவான ,தர்மமே உருவான ராமன் என்கிற தெய்வ உணர்வு ,சீதா என்கிற குண்டலினி சக்தியோடு ஐக்கியமாகி ,ஆன்மீக விழிப்புணர்வையும் , ஜீவாத்மா பரமாத்மாவோடு கலக்கும் ஒரு தெய்வீக அனுபவத்தையும் அளிக்கிறது .இந்து மதத்தில் ராமன் ஒரு மரியாதைப் புருஷோத்தமனாக ,அதாவது ஆண்களிலேயே உத்தமனாகவும் ,அவன் பத்தினியான சீதா தேவி பெண்மையின் சிறந்த எடுத்துக் காட்டாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள் . இவர்கள் இருவரும் சாதாரண மானிடப் பிறவிகள் அடைய முடியாத ,முழுமையின் ,நிறைவின் உச்சத்தைத் தங்கள் உன்னத குணங்களால் அடைந்து உதாரண வாழ்க்கைக்குச் சான்றாக விளங்கினார்கள்
ராம் என்பது நம் உடலில் மணிபூரக சக்ரம் அதாவது சூரிய முடிச்சின் பீஜ மந்திரம் என்று கருதப்படுகிறது. சீதாராம் மந்திரத்தை உச்சாடனம் செய்யும் பொழுது ,நம் உள்ளே ஒரு ஜ்வாலை எரிந்து ,நம் உடலின்,மனதின்,கர்ம வினைகள் அனைத்தையும் தூய்மைப் படுத்தி விடும் . அது மட்டுமல்லாமல் ,இந்த அற்புதமான சீதாராம மந்திரம் நமக்கு நேர் வழியைக் காட்டி ,எந்த ஒரு அறிய செயலையும் செய்வதற்கு வேண்டிய மன திடத்தையும் ,ஞானத்தையும் அருள வல்லது . .பூமித்தாயின் குழந்தையாகத் தோன்றிய சீதா தேவி நம் உடலில் மூலாதாரச் சக்ரத்தின் அம்சமாக விளங்குகிறாள் . அதனால் பஞ்ச பூதங்களில் ஒன்றான ப்ருத்வி எனப்படும் மண் தத்துவமாக விளங்கும் சீதா தேவி ,நம் உடலில் மூலாதார சக்கரத்தில் குண்டலினி சக்தியாக அமைந்துள்ளாள் .
எனவே சீதாராம் மந்திரத்தின் ஜபத்தினால் நம் உடலில் மூலதாரத்தில் ஏற்படும் ஆன்மீக அதிர்வுகளானது ,சீதா பிராட்டியின் அனுக்ரஹத்தால் நமக்கு நலத்தையும் ,வளத்தையும் குறைவின்றி வழங்க வல்லது . இதில் சிறிதும் சந்தேகமில்லை .
இப்படி தொடர்ந்து சீதாராம் மந்திரத்தை உச்சரித்து ஜபித்து வந்தால் ,நம்மை ஆன்மீகத்தின் ஆழத்திற்கு அழைத்துச் சென்று ,இறைவனைத் தேடும் நாட்டத்தை அதிகமாக்கும். நாம் மனதில் சீதாராம் சீதாராம் என்று ஸ்மரணை செய்து கொண்டே இருந்தால் ,நம்முடைய நாடிகளில் ,சக்கரங்களில் நேர்மறையான தெய்வீக அதிர்வுகள் உண்டாகி அவற்றை தூய்மைப் படுத்தி அவற்றில் லயம் ஏற்படுகிறது . தூய்மை என்பதை ,விஞ்ஞான முறையில் சொல்வதானால் ,இந்த அதிர்வுகள் நம் உடலில் இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி ,குறைபாடுகளைச் சரி செய்து சமன் படுத்துகிறது. .இப்படி செய்யச் செய்ய ஒரு ஆழந்த அமைதியும் ,ஓய்வும் கிடைக்கின்றது .தொடர்ந்து இப்படி மந்திர ஜபம் செய்யும்பொழுது வழக்கமாகத் தோன்றும் மன அழுத்தம் ,மன இறுக்கம் இவை எல்லாம் குறைந்து ,கரைந்து ,மயிலிறகாய் மனம் லேசாகி விடுகிறது .
நம்முள்ளே குடியிருக்கும் எதிர்மறை வினைகள் எரிந்து அழிந்து ,ஒரு ஆனந்த நிலை மலர்கின்றது . இடைவிடாமல் ,அனவரதமும் ,முறையானபடி சீதாராம் சீதாராம் என்று ஸ்மரணை செய்து கொண்டே இருந்தால் ,நமக்கு உற்சாகமும் ,உயிர்த்துடிப்பும் ,ஆனந்தமும் எல்லையில்லா அளவில் சித்தித்துக் கொண்டே இருக்கும் . இறைவனிடம் அன்பும் பக்தியும் பெருகிக் கொண்டே இருக்கும் .நம்முடைய அஹங்காரம் கரைந்து உருகிக் காணாமல் போய் விடும் . சுருக்கமாகச் சொன்னால் ,இந்த உலகத்தில் நம்முடைய தினசரி வேலைகளைக் ,கடமைகளை , மனத்தில் அழ்ந்த அமைதியுடனும் ,பரவசத்துடனும் ஆற்றும் திறன் படைத்தவர்கள் ஆகி விடுவோம்.
இந்த அத்புதமான மந்திரத்தின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். இறைத் தன்மையின் எதிர்மறை நிலையாம் பெண்ணின் தோற்றமாக சீதாவும் ,நேர்மறை நிலையாம் ஆணின் தோற்றமாக ராமனும் கருதப் படுகிறார்கள் . .அதனால் தான் இந்த சீதாராம் மந்திரத்தை உச்சாடனம் செய்யும் பொழுது நமக்குள் ஆண் தன்மையும் பெண் தன்மையும் சம நிலை பெறுகிறது . நம்முடைய மூளையின் இரு பகுதிகளும் சம நிலையடைந்து ஸ்திரமாக உறுதியாகிறது . இந்த நிலையில் மனம் என்ற குரங்கு அடங்கி ,மனம் அமைதியடைந்து ,நாளடைவில் ,நம் புலன்கள் அனைத்தையும் மூளைத் தன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிகிறது. .நம்முடைய நடத்தையும் தனித்தன்மையும் முழுமையான வளர்ச்சி பெற்றுத் திகழும் அற்புத நிலை ஏற்படும். .நாம் நினைப்பதைச் சொல்லி சொல்வதைச் செய்யும் வகையில் நம் எண்ணம்,சொல்,செயல் மூன்றும் ஒரு லயத்தில் இயங்கும் தன்மை பெறுவோம் . குணத்திலும் நடத்தையிலும் ஒரு நேர்மை காணப்படும். நாம் நடந்து கொள்ளும் விதம் நிலைத்தன்மை உடையதாக ,போலித்தனம் இல்லாமல் ,பாசாங்கு அற்றதாக இருக்கும் .
நமக்குள் இருக்கும் ஆற்றல் மேலும் மேலும் வளர்ந்து பூரணமாக ஆகும் .சீதாராம் நமக்கு உலக மற்றும் ஆன்மீக வாழ்க்கை இரண்டிலும் .முன்னேற்றத்தையும் மங்களத்தையும் வழங்கும் அருள் மந்திரமாகும் .
சீதாராம் மந்திர அதிர்வுகள் நம்மைச் சூழ்ந்துள்ள எதிர்மறை வினைகள் எல்லாவற்றிடம் இருந்தும் ஒரு உறுதியான கவசமாக அமைந்து நம்மைக் காக்கிற ஆற்றல் படைத்தவை.
வரக்கூடிய ஆபத்துக்கள் ,நிகழக் கூடிய விபத்துக்கள் ,தாக்குதல்கள் அனைத்திலிருந்தும் எல்லா நேரங்களிலும் நம்மைக் காப்பாற்றும் சக்தி படைத்தவை .
சீதாராம் மந்திரத்தின் சக்தியும் ஆன்மீக அதிர்வுகளும் ஒரு மனிதனை நல் வழியில் முழுவதுமாக மாற்றக் கூடியது . இந்த மந்திரத்தைச் சொல்பவரின் உள்ளத்து அமைதியும் ஆனந்தமும் அவர் முகத்தில் ஆச்சரியமான பொலிவைக் கொடுத்து பிரகாசிக்கச் செய்யும்.
இப்படியாக இந்த சீதாராம் மந்திர ஜபத்தினால் ,நல்ல உடல் நலம் ,மன அமைதி ,எண்ணங்களில் சமநிலை ,அளவற்ற செல்வம் ,மேம்பட்ட உறவு நிலைகள் ,ஆத்மாவுடன் இறைவனின் ஐக்கிய நிலை இவ்வளவும் கிடைக்கப் பெற்று வாழ்க்கையே ஒரு நிறைவுத் தன்மையை அடையும் . .இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கடைசியில் தன்னைத் தானே உணர்கின்ற ஒரு உயர்ந்த நிலையை அடையலாம்.
சீதாராம்!
With thanks for translation to Mrs Meena Ram