உண்மை பேசுதல் என்பது ஒரு நற்குணம்; நற்பண்பு ; நல்ல வாழ்க்கை நெறி என்று உலகிலுள்ள அனைத்து மதங்களும் போதிக்கின்றன .
உண்மையும் கடவுளும் ஒன்றேதான் .இப்படியும் சொல்லலாம் .உண்மை தான் கடவுள் .கடவுள் தான் உண்மை .வேறு வேறல்ல .உண்மை அல்லது சத்தியம் நிலையானது .மாற்றத்திற்கு உட்படாதது . .எனவே தான் உண்மை பேச வேண்டும் என்று வலியுறுத்தப் படுகிறது .
உண்மை பேசுவதில் பல நன்மைகள் ,பல சௌகரியங்கள் உள்ளன . அதில் முக்கியமானது ,நாம் உண்மையை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதுமானது . ஏனென்றால் உண்மை மாறுவதில்லை . அதோடு ,யார் யாரிடம் என்னென்ன பொய்கள் எப்போது சொன்னோம் ,உண்மை சொல்வதாகச் சொல்லி எதை எல்லாம் மறைத்தோம் என்றெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளத் தேவை இல்லை . ஆனால் ,பொய் பேசுபவர் இவை அனைத்தையும் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவர் .
இன்னும் சிலர் வெளிப்படையாகப் பேசுவதாக நினைத்து உண்மை
பேசுவார்கள்.பல நேரங்களில் எதிராளியை தாழ்த்திப் பேசும் நோக்கத்தோடு
அல்லது அவர்களைப் புண்படுத்தும் எண்ணத்தோடு மனதில் நினைப்பதை உண்மை என்ற பெயரில் வெளிப் படுத்துவார்கள் .
.
இதில் இன்னும் வருத்தம் தரக் கூடிய விஷயம் என்னவென்றால் ,பேசுவதற்கு முன்பே அவர்களிடம் இப்படிச் சொல்லி விடுவது :-"நான் சொல்கிறேன் என்று தவறாக நினைக்காதீர்கள் " அப்படியென்றால் அவர்கள் தவறாக நினைக்கக் கூடிய ஒன்றைத்தானே சொல்லப் போகிறார்கள்.இதில் எதிராளி வருத்தம் தானே அடைவர் .
உண்மையைப் பேசும் பொழுது எப்பொழுதும் அதில் அன்பும் இனிமையும் கலந்து இருக்க வேண்டும் .நீங்கள் பிறரிடம் மரியாதையும் அன்பும் உடையவர் என்றால் ,உங்கள் வார்த்தைகளில் வெறுப்பு ,காழ்ப்புணர்ச்சி ,பிறரைத் தாழ்வாக நினைக்கும் எண்ணம் இவை எதுவுமே இடம் பெறாது .
சரியான விதத்தில் சொல்லப்படும் உண்மைக்கு காயங்களை ஆற்றும் வல்லமை உண்டு.மன மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி உண்டு .அன்பும் மரியாதையும் கலந்து பேசப்படும் உண்மையில் பணிவு நிறைந்து இருப்பதால் அதில் வலி உண்டாக்கும் கடுமை இருக்காது . உண்மை பேசுவதற்கு மரியாதை கலந்த ஒருமென்மையான மனப்பான்மை தேவை.உண்மை வலிமையானது .அதனால் உண்மையைக் கூற உரத்து குரலெழுப்பத் தேவை இல்லை.எப்பொழுது எங்கு நன்னெறிகளும் ,கோட்பாடுகளும் கேள்விக்குறியாகிப் போகிறதோ ,அங்கு உண்மையை வலிவுடனும்,திடமாகவும் ,உறுதியுடனும் எடுத்துக் கூறலாம்.
பெற்றோர் பிள்ளைகளை உண்மையே பேசும்படி அறிவுரை கூறுகிறார்கள்.பள்ளிகளில் மாணவ சமுதாயத்திற்கு உண்மையைப் பேசச் சொல்லி கற்றுத் தரப்படுகிறது .சமுதாயத்தில் நம்முடைய பல வேலைகளுக்காக பல படிவங்கள் நிரப்ப வேண்டியிருக்கிறது .அவற்றில் உண்மைக்கான ஒப்புதல் கேட்கப்படுகிறது .இதிலிருந்து உண்மை என்பது சட்டப்படியான தார்மீகமான ஒரு கட்டாயமாக கருதப் பட்டு வருகிறது .கட்டாயமாக்கப்பட்ட எதுவும் கண்ணோட்டங்களில் ,புரிந்து கொள்ளுதலில் ,கருத்து விளக்கங்களில் வேறுபாடுகள் நிறைந்ததாகவே காணப்படும் .
உண்மை பேசுவதை ஒரு நற்பண்பாக ,நல்லொழுக்கமாகக் கருதும் மனிதனுக்கு உண்மை பேசுவது மிக எளிதாக சாத்தியமாகும். உண்மை பேசுவது ஒருவருடைய தனிப்பட்ட இயல்பாகும் வெளிப்புற தூண்டுதலாலோ உந்துதலாலோ இந்த குணம் தோன்றாது ; வளராது . எனவே உண்மை பேசுவதும் ,உண்மையைப் பின்பற்றுவதும் சுலபமான வழியாகும் . உண்மை பேசுவதை ஒரு கொள்கையாகக் கடைப்பிடித்து வாழ்வது ஒரு சிறந்த வாழ்க்கை நெறியாகும் .. மரியாதையும் இனிமையும் சேர்ந்து உண்மை பேசப்படும் பொழுது அதுவே ஒரு வாழ்க்கை முறையாகி விடுகிறது . .அப்பொழுது வாழ்க்கையின் இயல்பு மதிப்பு அதிகரித்து பூரணத்வம் அடைகிறது.
உண்மையின் நிலைப்பாடு ஒன்றாக இருந்தாலும் ,அதன் மீது ,நம்முடைய மனநிலை ,விருப்பு -வெறுப்பு ,புரிந்து கொள்ளும் தன்மை ,திறன் இவற்றின் வண்ணங்கள் பூசப் படுகின்றன . இதனால் என்ன ஆகிறது ? ,பிறருக்கு உண்மை என்று தெரிவது , முழு விவரமும் தெரியாமல் அல்லது புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்களுக்கு தெரியாமல் போகிறது .
நிறைவாக மேலே குறிப்பிட்டவற்றைத் தொகுத்து சொன்னால் ,"அன்பும் ,இனிமையும் மரியாதையும், பணிவும் கூட்டி உண்மை பேசும் பொழுது ,நம் உள்ளத்தின் ஒளி இன்னும் சுடர் விட்டு பிரகாசித்து வெளிச்சம் தரும் "
சீதாராம் !
With thanks for translation to Mrs Meena Ram