அமிர்த தாரை – த்யானயோகி ஒம்தாஸ்ஜியின் உபதேசங்கள்

அமிர்த  தாரை – த்யானயோகி ஒம்தாஸ்ஜியின் உபதேசங்கள்

சனி, 31 ஆகஸ்ட், 2013

சத்தியம் பேசு இனிமையாகப் பேசு

உண்மை பேசுதல் என்பது ஒரு நற்குணம்; நற்பண்பு ; நல்ல வாழ்க்கை நெறி என்று உலகிலுள்ள அனைத்து மதங்களும் போதிக்கின்றன .

உண்மையும்  கடவுளும் ஒன்றேதான் .இப்படியும் சொல்லலாம் .உண்மை தான் கடவுள் .கடவுள் தான் உண்மை .வேறு வேறல்ல .உண்மை அல்லது சத்தியம் நிலையானது .மாற்றத்திற்கு உட்படாதது . .எனவே தான் உண்மை பேச வேண்டும் என்று வலியுறுத்தப் படுகிறது .

உண்மை பேசுவதில் பல நன்மைகள் ,பல சௌகரியங்கள் உள்ளன . அதில் முக்கியமானது ,நாம் உண்மையை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதுமானது . ஏனென்றால் உண்மை மாறுவதில்லை . அதோடு ,யார் யாரிடம் என்னென்ன பொய்கள் எப்போது சொன்னோம் ,உண்மை சொல்வதாகச் சொல்லி எதை எல்லாம் மறைத்தோம் என்றெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளத் தேவை இல்லை . ஆனால் ,பொய் பேசுபவர் இவை அனைத்தையும் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவர் . 

இன்னும் சிலர் வெளிப்படையாகப் பேசுவதாக  நினைத்து உண்மை 
 பேசுவார்கள்.பல நேரங்களில் எதிராளியை தாழ்த்திப் பேசும் நோக்கத்தோடு 
 அல்லது அவர்களைப் புண்படுத்தும் எண்ணத்தோடு மனதில் நினைப்பதை உண்மை என்ற பெயரில் வெளிப் படுத்துவார்கள் .
.
இதில் இன்னும் வருத்தம் தரக் கூடிய விஷயம் என்னவென்றால் ,பேசுவதற்கு முன்பே அவர்களிடம் இப்படிச் சொல்லி விடுவது :-"நான் சொல்கிறேன் என்று தவறாக நினைக்காதீர்கள் " அப்படியென்றால் அவர்கள் தவறாக நினைக்கக் கூடிய ஒன்றைத்தானே சொல்லப் போகிறார்கள்.இதில் எதிராளி வருத்தம் தானே அடைவர் . 
உண்மையைப் பேசும் பொழுது எப்பொழுதும் அதில் அன்பும் இனிமையும் கலந்து இருக்க வேண்டும் .நீங்கள் பிறரிடம் மரியாதையும் அன்பும் உடையவர் என்றால் ,உங்கள் வார்த்தைகளில் வெறுப்பு ,காழ்ப்புணர்ச்சி ,பிறரைத் தாழ்வாக நினைக்கும் எண்ணம் இவை எதுவுமே இடம் பெறாது .

சரியான விதத்தில் சொல்லப்படும் உண்மைக்கு காயங்களை ஆற்றும் வல்லமை உண்டு.மன மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி உண்டு .அன்பும் மரியாதையும் கலந்து பேசப்படும் உண்மையில் பணிவு நிறைந்து இருப்பதால் அதில் வலி உண்டாக்கும் கடுமை இருக்காது . உண்மை பேசுவதற்கு  மரியாதை கலந்த ஒருமென்மையான  மனப்பான்மை தேவை.உண்மை வலிமையானது .அதனால் உண்மையைக் கூற உரத்து குரலெழுப்பத் தேவை இல்லை.எப்பொழுது எங்கு  நன்னெறிகளும் ,கோட்பாடுகளும் கேள்விக்குறியாகிப் போகிறதோ ,அங்கு உண்மையை வலிவுடனும்,திடமாகவும் ,உறுதியுடனும் எடுத்துக் கூறலாம். 

பெற்றோர் பிள்ளைகளை உண்மையே  பேசும்படி அறிவுரை கூறுகிறார்கள்.பள்ளிகளில் மாணவ சமுதாயத்திற்கு உண்மையைப் பேசச் சொல்லி கற்றுத் தரப்படுகிறது .சமுதாயத்தில் நம்முடைய பல வேலைகளுக்காக பல படிவங்கள் நிரப்ப வேண்டியிருக்கிறது .அவற்றில் உண்மைக்கான ஒப்புதல் கேட்கப்படுகிறது .இதிலிருந்து உண்மை என்பது  சட்டப்படியான தார்மீகமான ஒரு கட்டாயமாக கருதப் பட்டு வருகிறது .கட்டாயமாக்கப்பட்ட எதுவும் கண்ணோட்டங்களில் ,புரிந்து  கொள்ளுதலில் ,கருத்து விளக்கங்களில் வேறுபாடுகள் நிறைந்ததாகவே காணப்படும் .

உண்மை பேசுவதை ஒரு  நற்பண்பாக ,நல்லொழுக்கமாகக் கருதும் மனிதனுக்கு உண்மை பேசுவது மிக எளிதாக சாத்தியமாகும். உண்மை பேசுவது ஒருவருடைய தனிப்பட்ட இயல்பாகும்  வெளிப்புற தூண்டுதலாலோ உந்துதலாலோ இந்த குணம் தோன்றாது ; வளராது . எனவே உண்மை பேசுவதும் ,உண்மையைப் பின்பற்றுவதும் சுலபமான வழியாகும் . உண்மை பேசுவதை ஒரு கொள்கையாகக் கடைப்பிடித்து வாழ்வது ஒரு சிறந்த வாழ்க்கை நெறியாகும் .. மரியாதையும் இனிமையும் சேர்ந்து உண்மை பேசப்படும் பொழுது அதுவே ஒரு வாழ்க்கை முறையாகி விடுகிறது .  .அப்பொழுது வாழ்க்கையின் இயல்பு மதிப்பு அதிகரித்து பூரணத்வம் அடைகிறது.

உண்மையின் நிலைப்பாடு ஒன்றாக இருந்தாலும் ,அதன் மீது ,நம்முடைய மனநிலை ,விருப்பு -வெறுப்பு ,புரிந்து கொள்ளும் தன்மை ,திறன் இவற்றின் வண்ணங்கள் பூசப் படுகின்றன . இதனால் என்ன ஆகிறது ? ,பிறருக்கு உண்மை என்று தெரிவது , முழு விவரமும் தெரியாமல் அல்லது புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்களுக்கு தெரியாமல் போகிறது .

நிறைவாக மேலே குறிப்பிட்டவற்றைத் தொகுத்து சொன்னால் ,"அன்பும் ,இனிமையும் மரியாதையும், பணிவும் கூட்டி உண்மை பேசும் பொழுது ,நம் உள்ளத்தின் ஒளி இன்னும் சுடர் விட்டு பிரகாசித்து வெளிச்சம் தரும் "

                                                         சீதாராம் !

With thanks for translation to Mrs Meena Ram

புதன், 21 ஆகஸ்ட், 2013

பயமே முன்னேற்றத்தின் திறவுகோல்

பொதுவாக ஒரு மனிதன் அடிப்படையில் நல்லவனாக ,கடமையைச் செய்பவனாக ,தன குடும்பத்தின் மீது அன்பும் பாசமும் உள்ளவனகத்தான் இருக்கிறான் .தன் குடும்பத்தை ,தன் சமூகத்தை ,தன் தாய் நாட்டை நேசிக்கிறவனாய் பேணிக் காப்பவனாய் நடந்து கொள்கிறான் . சுருக்கமாகச் சொன்னால் தனக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளைத்  தவறாமல் நிறைவேற்றுகிறான் .

 புற வாழ்வில் தன்னுடைய சுய முன்னேற்றத்திற்கும் ,சுய வளர்ச்சிக்கும்  தனக்கு எது நல்லது என்பதை அறிந்து நடக்கும் மனிதன் ,அக வாழ்வில் உணர்வு பூர்வமாக எப்போதாவதுதான் செயல் படுகிறான்.

ஆரோக்கியமான உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிகக் கடினமான ஒரு செயலாகும் .ஏனென்றால் பழக்கப்பட்ட ஒன்றை மாற்றிக் கொள்வது என்பது எளிதல்ல. மனம் மாற்றத்தை ஏற்க மறுக்கிறது. உதாரணத்திற்கு, உடற்பயிற்சி ஒருவருக்கு நல்லது என்று நன்கு தெரிந்தும் , தினமும் நடைப் பயிற்சி செய்வதைக் கடினமாகக் கருதுகிறார். இன்னும் சொல்லப் போனால் ,ஒருவருடைய உடல் ஆரோக்கியத்துக்கு உணவுக் கட்டுப்பாடு தேவை என்று மருத்துவர் எச்சரிக்கை செய்தும் கூட ,அந்த மனிதருக்கு உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப் பிடிப்பது முடியாத ஒன்றாக இருக்கிறது .  உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. கடைசியில் நோயின் தீவிரமும் அதன் விளைவாக ஏற்படும் வலியும் ,தாக்கமும் தான் ஒரு மனிதனுக்கு மாற்றத்தின் அவசியத்தை உணர்த்துகிறது . சில வேளைகளில்  உயிருக்கு ஆபத்து என்ற ஒரு அச்சுறுத்தல் ஏற்படும் பொழுது மட்டுமே மனப் போக்கையும் ,பழக்க வழக்கங்களையும்  மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தைப்  பலர்  உணருகிறார்கள்.

ஆகவே  அச்சம் அல்லது பயம் தான் பெரும்பாலும் நன்மைக்குத் திறவு கோலாக அமைகிறது.நம் குடும்ப வாழ்க்கையிலும் சரி , நண்பர்களோடும் சரி , இந்த பயம் தான் நன்னடத்தைக்கும் ,நல்ல மாற்றங்களுக்கும் முக்கியக் காரணமாகும் . .நாம் வாழும் காலத்தில் நம்முடைய பெற்றோர் ,உடன் பிறந்தவர்கள் ,நண்பர்கள் இவர்களுடைய உறவை,நட்பை,பாசத்தை இழந்து விடுவோமோ என்ற ஒரு பயம் வருகிறது அதனால் அவர்களை சந்தோஷப் படுத்தி அவர்கள் அன்பு ,நட்பு ,பாசம் இவற்றைப் பெரும் பொருட்டே நல்ல நடத்தையை மேற்கொண்டு நல்லவர்களாக நடந்து கொள்கிகிறோமே தவிர  எப்பொழுதும் நல்லதையே பேச வேண்டும் ; நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற உணர்வினால் அல்ல. 

ஆன்மீக வழியை எடுத்துக் கொண்டால் , நமக்கு எது நல்லது என்பதை நாம் அறிவோம் .இருந்தும் கூட நம் எண்ணங்களை ,மனப் போக்கை ,பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதை சிரமமாக உணருகிறோம் . நம்மில் பலருக்குக் கடவுள் இருக்கிறார் என்ற அறிவு இருந்தாலும் ,எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தப் பரம் பொருளை நேரில் பார்த்த அனுபவம் இல்லை .ஆகையால் ,நாம் என்ன நினைக்கிறோம் என்றால் ,நம்மால் அறியப்படாத ஒருவர் அல்லது ஒன்று எப்படி நமக்குத் துன்பம் தர முடியும் என்று.

இதனால் நமக்குள் மாற்றம் நிகழாமலேயே போய்விட்டால் நம்முடைய வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடாதா ? இதற்கு ஒரே வழி நாம் குருவிடமும் இறைவனிடமும் அன்பும் பக்தியும் செலுத்துவதுதான் .குருவிடமிருந்தும் இறைவனிடமிருந்தும் கிடைக்கும் கருணையும் அருளும் விவரிக்க முடியாத இனிமையும் பெருமையும் நிறைந்தது ஆகும் . அப்படிப்பட்ட கருணையையும் அருளையும் எங்கே இழந்து விடுவோமோ என்ற பயமே நம்மை நேரான ,சரியான பாதையில் நடத்திச் செல்லும் . அதுமட்டுமல்ல .நமக்குள் ஆன்மீக ரீதியில் எந்த முன்னேற்றமோ அல்லது மாற்றமோ நிகழவில்லை என்றால்  குருவின் மற்றும் ,கடவுளின் கோபத்திற்கும் சீற்றத்திற்கும் ஆளாகி விட்டால் ஏற்படும்  விளைவுகளை எண்ணி பயந்து ,துன்பமும் வலியும் நிறைந்த நேர்மையான வழியில் செல்ல முற்படுவோம் . குருநாதர் மீதும் கடவுளின் மீதும் நமக்கு இருக்கும் பயமே அவர்கள் மீது அதிக அன்பையும் பக்தியையும் ஏற்படுத்தும் .

பயம் என்பது அன்பைப் பெறவும் பக்தி செய்யவும் ஒரு தூண்டுதல் என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். .ஏனென்றால் பக்தியும் பயமும் ஒன்றாக இணைந்த உணர்வுகள் .இவை இரண்டுமே நம்முடைய மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பெரிதும் துணை புரியும் என்பதில் நெல்முனையளவும் ஐயமில்லை .

With thanks for translation to Mrs Meena Ram